பூமகள் பூத்துவிட்டாலென
பூவிதல் மொட்டு சிரிக்க
ஓவியத்தில் இருக்கும் ஓவியமாய்
ஒன்றும் புரியாதவளாய் இருக்கிறோம்
விட்டில் பூச்சியாய் பறக்கலாமென
நினைத்து என்னை
விளையாடும் வயதிலே புடவை கட்டுடியென
வீட்டின் ஓரத்தில் என்னை அமர வைத்து
கன்னத்தை முத்தமிடும் சந்தனமும்
கண்களை அன்பு செய்யும் சாயமும்
என்னை தழுவிட...
தலைக்கு தண்ணீர் ஊற்றிட
தடபுடலாக சடங்குகள் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்திட..
என்னை ஏதோ ஒரு உணர்வுடன் பார்க்கும் என் அன்னையின் கண்களும்
என்னை உரிப்பது போல் பார்க்கும் சிலர் காட்டுமிராண்டிகளின் கண்களும்
பெரிதாகத் தெரியவில்லை நான் பாவாடை கட்டும் வயிதுனிலே...
மாதத்தில் ஐந்தும் வாரத்தில் ஏழும்
மங்காத நெருப்பை தரும்
மெழுகாய் உருகுகின்றோம்
நெருப்பில் அல்ல எங்களின் இரத்தத்தில்!
நிமிடங்களாய் தரும் வேதனையையும்
நிற்காமல் சுற்றும் உலகமும்
எங்கள் தலைகளை சுற்றுவது போல்
நீண்ட மயக்த்தை தருகின்றன
நீண்ட கத்தியால் குத்திக் குடைந்ததுபோன்று
வயிறும் கதறுகின்றன!
எலும்புகள் உடைந்தது போல இடுப்பிலும் நொருங்கும் சத்தமும்
மார்பே பிளந்தது போல இதயத்தின் அலறலும்
பலநூறு யானைகள் அழுத்துவது போல்
உடலின் சோர்வும்
எப்படியாவது இதை கடர வேண்டுமென
ஏன் நமக்கு மட்டும் என்று
ஒவ்வொரு மாதமும் மனதில்
எழும் கேள்விகளுக்கு
எங்களின் இரத்தம் மட்டுமே பூமிக்கும் பதில்சொல்கிறது
பிறரிடம் கூற தலைகுனிந்தும்
பிறர் காலில் மிதிவாங்கும்
மண்புழுக்களா! நாங்கள்?
மாதத்தின் உதிரமும்
மறுசீராக வரவில்லையென
மனம் கலங்கி துன்புறும்
மாந்திரிகளாகவும்......
தொடரும் சோதனைகளும் தொடராமல் எங்களை வாழ்வின் வேதனைகளும் முடியும் தருவாயில்
உயிருடன் இருக்கும்போதே
உயிரோடு எரிவதுபோல்
உணர்வுகளை கொடுக்கும் வலியை அனுபவிக்கும் பெண்களாகவும்;
அவ்வலியோடு தினமும் போராடும்
ஆச்சரியமுள்ள வீராங்கனைகளாகவும்;
இதழின் ரோஜாவை போல்
கள்ளி பழத்தின் சுவை போல்
குறிஞ்சி மலரின் நறுமணத்தை போல்
எங்கள் வலியும் வேதனையும்
பட்டமடித்து பறக்கும் 12 வயதிலிருந்து
பிறரின் ஆதரவை நாடும் 60 வயது வரை எங்களோடு தொடரும் உயிர் வலியாகவும்
எல்லோரும் சொல்ல தயங்கும் மாதவிடாயாகவும் இருக்கும்
இந்த உயிர் வலிதான்
பிறஉயிர்களை தோற்றுவிக்கும் அடிப்படை! அம்மாக்களை உருவாக்க காரணமாகிறது!
இப்படிக்கு அன்புள்ள உயிர்வலி.............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக