ஊட்டச்சத்தில்லா குழந்தையும்
உணவில்லாமல் வாடும் தாயும்
பால் கொடுக்க முடியாமல் தவிக்கும் அன்னையும்;
இரத்தத்தை பாலாக குடிக்கும் சேயும்
ஒன்றாக மடியும் வேளையிலே தேடுகின்றனர் இறைவன் எங்கே என்று..
உலகின் ஒரு பகுதி மக்கள் வளமையாகவும்;
மறுபகுதியில் வறுமையாகவும்;
ஓர் பகுதியில் உணவுக்காக கையேந்தியும்
மறுபகுதியில் பணத்திற்காக வரிசைகளிலும்
பல பகுதியில் எரிபொருளாகவும்
சில பகுதிகளில் விலையுயர்ந்த பொருளுக்காகவும்
நிற்கும் மனிதர்களின் சமமற்ற வேளையிலே
தேடுகின்றனர் இறைவன் எங்கே என்று!
பலரை அடிமைகளாக ஆளும் அரசாங்கமும்
சிலரை அடிமைகளின் தலைவராக வணங்கும் அரசாங்கத்தையும்
பார்த்துக்கொண்டிருக்கும் இறைவனை தேடுகின்றனர் எங்கே என்று!
பிறக்கும் குழந்தையின் அழுகையிலே
பிறந்தது உயர்குடி இழிகுடி என்றும்!
பிடிக்கும் மனிதர்களையும் உருவாக்கிய
இறைவனை தேடுகின்றனர் எங்கே என்று!
போரில் இறக்கும் போராளிகளையும்
போரே வேண்டாம் என்று துடிக்கும் அப்பாவிகளையும்
அப்பாவி போல் வேடிக்கை பார்க்கும் பெரிய நாடுகளையும்
அந்த நாடுகளை ஆளும் சில அதிகாரங்களும்
அதையும் உருவாக்கிய இறைவனை தேடுகின்றனர் எங்கே என்று!
உண்மை தேடி அலையும் நேரத்தில்
உலக மீடியாக்களில் மனிதநேயத்தை தேடும் வேலையிலே
உடனிருக்கும் மனிதனுக்கு உதவாத மனிதத்தை
மனம் இல்லாமல் பார்க்கும் இறைவனை தேடுகின்றனர் எங்கே என்று!
கோடியிலே புரண்டு மருத்துவம் பார்க்கும் மனிதர்களின் வாழ்க்கையும்
தெருக்கோடியில் கீழே விழுந்த எச்சத்தை தின்னுகின்ற மனிதர்களின் வாழ்க்கையும்
மாளிகை கட்டி காவலும் போட்டு
கண்ணுறங்க வழியில்லாமல் இருப்பவர்களையும்
தெருக்களே மாளிகையாக தங்குபவர்தளையும்
வேறுபாட்டை இரசிக்கும் இறைவனை தேடுகின்றனர் எங்கே என்று!
நீதியின் கன்னத்தை முத்தமிடும் பணத்தின் அதிகாரத்தையும்
நீதி தேவதையின் கால் தூசி கூட துடைக்க இயலாத ஏழையின நேர்மையும்
நேர்த்தியாக பார்க்கும் இறைவனை தேடுகின்றனர் எங்கே என்று?
உணவிழந்து உடையிழந்து ,வறுமையால் உணர்விழந்து
நீதிக்காக மானமிழந்து
அமைதி தேட பக்தியிழந்து
உலகம் மாறுமா என்ற எதிர்பார்ப்புடன்
புத்தி இழந்தவனாய்
மனதில் தேடுகிறேன்
இறைவன் எங்கே என்று
விடை தெரியா கேள்விகளை உங்கள் முன்னே
விடை தெரிய விட்டுவிடுகிறேன்
எங்கே இறைவன் என்று
இன்று தேட ஆரம்பித்து
என்றும் தேடுகிறேன்
சாதாரண மனிதனாக முடிக்கிறேன் இப்புள்ளியுடன்.
Spr👏👏
பதிலளிநீக்கு